பக்கம் எண் :

100கவிமணியின் கவிதைகள்

Untitled Document
623 'ஆதி நாயகன் - உலகை
     அளந்த மால், எனவே
வாதம் செய்திடுவர் - கற்ற
     வைணவப் பெரியார்.

624 'முக்குடை யோனாம் - அருக
     மூர்த்தி யேமுதல்வன்;
தர்க்க மேதுமில்லை' - என்று
     சமணர் சாதிப்பார்.

625 காதல் நாயகனைக் - கனவில்
     காணும் மங்கையர்போல்,
ஓது கின்றதலால் - உலகில்
      உண்மை கண்டவரார்?

626 மூலமுதற் பொருளை - என்றும்
     முடிவிலாப் பொருளை
ஞால மிசைக் கண்ணால் - கண்ட
     ஞானி யெவனு முண்டோ?

84. அமிழ்துறையும் மணிகள்
627 ஆழ்கடலின் கீழெவர்க்கும்
     அறியமுடி யாமல்
அளவிறந்த ஒளிமணிகள்
     அமிழ்ந்துறையும், அம்மா!

628 பாழ்நிலத்தில் வீணாகப்
     பகலிரவும் பூத்துப்
பலகோடிப் பனிமலர்கள்
     பரிமளிக்கும், அம்மா!

629 கடல் சூழ்ந்த உலகுபுகழ்
     காவியம்செய் யாமல்
கண்மூடும் கம்பருக்கோர்
     கணக்கில்லை, அம்மா!

630 இடமகன்ற போர்முனைதான்
     ஈதென்னக் காணா
திறக்கின்ற வில்விசயர்
     எத்தனைபேர், அம்மா!