பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு105

Untitled Document
655 அண்டம்எல்லாம் காக்கும் ஈசன்
     ஆலயத்தில் மக்கள் எம்மைக்
கண்டகண்ணைக் கழுவுவரோ?
     கருணைசெய்ய மாட்டாரோ?

656 தருமஉரு வாம்ஈசன்
     தமியரையும் கண்டவுடன்,
கருணைவிழி அடைப்பாரோ?
     கனல்விழியைத் திறப்பாரோ?

657 குற்றமிலா எமைக்கண்டு
     கோயிலையும் அடைக்கலாமே?
பெற்றவரைக் காணவரும்
     பிள்ளைகளைத் தடுப்பார் உண்டோ?

658 ஆண்டவனைக் கண்டுதொழ
     ஆசைஎமக் கெழுந்திடாதோ?
நீண்ட மரஞ்செடியோ? நாங்கள்
     நெடும்பாறை தானோ? ஐயா!

659 பக்தியொடு கோயில்சென்று
     பணிந்துபதம் பெறுவோமேல்,
முத்தியிடம் போதாமல்
     முழுமோசம் வந்திடுமோ?

660 வனத்தில் ஒரு மரமாக
     வளர்ந்தோமிலை, மானிடரின்
இனத்தினிலே பிறந்தஇடர்
     இனிப்போதும், போதும், ஐயா!

661 தாகம்என்று வருபவர்க்குத்
     தண்ணீரை அளியாமல்,
ஆகமங்கள் ஓதிநிற்றல்
     அழகாமோ? அறமாமோ?

662 ஆலயத்திற் சென்றுதொழ
     ஆணையிடும் ஒளவைமொழி
ஞாலமிசை எங்களுக்கும்
     நன்மைதராப் புன்மொழியோ?