பக்கம் எண் :

106கவிமணியின் கவிதைகள்

Untitled Document
663 ஆவுரித்துத் தின்பரேனும்
     அரனடிக்கீழ் அன்பர்எனில்
தேவர்அவர் என்றுரைக்கும்
     திருமொழியும் வெறுமொழியோ?

664 சாதியினால் குறைவில்லை;
     தாழ்ந்தவரும் பத்தியினால்
வேதியரிற் பெரியர் என
     விளம்புமொழி வீண்மொழியோ?

665 சண்டாளர் ஆனாலும்
     சக்கரத்தான் அடியவரேல்,
கொண்டாடத் தக்கோர் எனக்
     கூறுவதும் பொய்மொழியோ?

666 சாவியிட்டுப் பூட்டுமிட்டுச்
     சந்நிதியில் காவலிட்டுத்
தேவிருக்கும் கோயிலைநீர்
     சிறைச்சாலை ஆக்கலாமோ?

667 கல்லார்க்கும் கற்றவர்க்கும்
     களிப்பருளும் களிப்பினைநீர்
பொல்லாதார் பொருளெனவே
     பூட்டிவைப்ப தழகாமோ?

668 நல்லார்க்கும் பொல்லார்க்கும்
     நலமளிக்கும் நலத்தினைநீர்
கல்லாலே கோட்டைகட்டிக்
     கடுங்காவல் செய்யலாமோ?

669 காணார்க்கும் கண்டவர்க்கும்
     கண்ணளிக்கும் கண்ணுதலை
வீணாக மூடிவைத்து
     விளங்காமற் செய்யலாமோ?

670 சாத்திரங்கள் கண்டறியோம்;
     சரித்திரங்கள் படித்தறியோம்;
சூத்திரங்கள் செய்யாமல்,
     துணைசெய்ய வேண்டும், ஐயா!