பக்கம் எண் :

116கவிமணியின் கவிதைகள்

Untitled Document
738 உண்ணச் சோறும் உடையும் அளித்தனம்;
     உதிரம் விட்டு அவன் போர்களை வென்றனம்;
எண்ணி லாப்பல நாடுக ளுக்கெலாம்
     இறைவ னாக்கி முடியையுஞ் சூட்டினோம்;
பண்ணு தற்கரி தான பலபல
     பணிகள் செய்தவன் சீர்த்தி வளர்த்தனம்;
நண்ணும் நன்றி இலாதவன் இன்றொரு
     நச்சு வாய்அர வாகிவிட் டான்ஐயோ!

739 பஞ்சத் தாண்டியாய் வந்தஅப் பாதகன்
     பாரில் நம்முளம் நையப் படுத்தினால்
செஞ்சிக் கெஞ்சித் திரிந்த அடியவன்
     கேலியாய் நம்மை நாய்கள்என் றெள்ளினால்.
தஞ்சம் நீர்என் றடைந்தவன் மாறிநம்
     தலையில் ஏறி மிதிக்கத் தொடங்கினால்,
அஞ்சி அஞ்சி அடங்கிக் கிடப்பதோ?
     ஆண்மை மிக்கவ ராக எழுவிரே!

96. பெண்களின் உரிமைகள்

740 மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!

741 அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
     அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
     கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

742 ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
     உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
     கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

743 சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?