பக்கம் எண் :

130கவிமணியின் கவிதைகள்

Untitled Document
தேசீயம் (8)
106. கதர் விற்பனை
843 பாவியென் கதையினைக் கேளும் ஐயா! - அந்தப்
     பாஞ்சாலி கதையும்ஈ தொக்குமோ? ஐயார்!
ஆவியைப் பிடித்துநான் அலைவதெல்லாம் - என்றன்
     அருமைக் குழந்தைகளுக் காகவே, ஐயா!

844   கூடப் பிறந்தவரும் மாண்டுபோனார் - என்னைக்
     கொண்டகணவரும் போய்க்காடு மறைந்தார்;
தேடி அவரளித்த பொருளுமில்லை - ஒரு
     செம்பால் அடித்தகாசென் கையிலும் இல்லை.

845 வாடி முகம்சடைத்த மக்களும் உண்டு - தீரா
     வயிற்றுப் பசியும் உண்டு நானும் உண்டு;
வீடும் குடியிருக்க இல்லை, ஐயா! - என்றன்
     விதியின் கொடுமைகளும் கொஞ்சமோ? ஐயா!

846 பருத்தி விளைக்குச்சென்று பஞ்சுவாங்கினேன் - அந்தப்
     பஞ்சை அரைத்து நல்ல நூலும் நூற்றேன்
ஒருத்தி துணையுமின்றி ஆடையும் நெய்தேன் - அதை
     ஊரூராய்க் கொண்டுகொண்டு விற்கவும் வந்தேன்.

847 நல்ல சரக்குச் சீமைச் சரக்கென்றுநீர் - இந்த
     நாட்டுச் சரக்கைப் பழிக்கலாமோ?
மெல்லிய பூவாடை நெய்துதருவோம் - உங்கள்
     மேலான ஆதரவே வேண்டும், ஐயா!

848 எங்களையோர் மில்லெனவே எண்ணலாமோ? அந்த
     இரும்புக்கு அசதி உண்டோ? களைப்பும் உண்டோ?
பொங்கு மனக்கவலை ஏதும் உண்டோ? - வீட்டுப்
     பொறுப்புகள் சற்றும் உண்டோ? கூறும், ஐயா!

849 நெல்லையள்ளிக் குத்துவேனோ? நெய்திடுவேனோ? நான்
     நெருப்பினை மூட்டுவேனோ? கொட்டை நூற்பேனோ?
மில்லினுக்கு வாயும்உண்டோ? வயிறுமுண்டோ? - அதை
     விட்டுவில காதமக்கள் கூடவே உண்டோ?