பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு135

Untitled Document
881 கங்கையினும் புனித மானகொடி - கோடிக்
     கதரின் இனியமணம் கமழும்கொடி,
மங்கையர் நோன்பிருந்து நெய்தகொடி - அவர்
     வாழ்வு தழையவந்த மங்கலக் கொடி.

882 மின்னல் இடிக்கும் அஞ்சாதுயருங்கொடி - விண்ணில்
     வீரர் திலகர்தொழும் விருதுக்கொடி;
தன்னை மிதித்தெறிந்த சூரர்களெல்லாம் - இன்று
     தாழ்ந்து தலைவணங்கக் காணும்கொடி.

883 சத்தியம் தவறாது காக்கும்கொடி - சாதிச்
     சமயச் சழக்குகளைப் போக்கும் கொடி,
உத்தம வீரர்களும் பத்தினிகளும் - தத்தம்
     உயிருக் குயிராகப் போற்றும்கொடி.

884 கலியுகக் கண்ணன் கருணாகரன் - அந்தக்
     காந்தி மகான்வாழ்த்தி யெடுத்தகொடி;
புலியொடு பசுவுஞ்சென் றோர்துறையில் - மனம்
     பொருந்திநீர் அருந்திடச் செய்யும்கொடி.

885 காணாப் புதுமைகளைக் காட்டும்கொடி - தொண்டர்
     கனவையும் நனகவாக மாற்றும் கொடி;
வாணாளின் இன்பமெலாம் வழங்கும்கொடி - நாட்டின்
     வளத்தை வளர்க்கவந்த மந்திரக்கொடி.

886 பட்ட மரம்தழையப் பண்ணும்கொடி - பொல்லாப்
     பகைவரை நண்பராய்க் கூட்டும்கொடி;
துட்டர் துடுக்குகளை அடக்கும்கொடி - தீய
     சோம்பலை ஓட்டித் துரத்தும்கொடி.

887 கிழவரைக் குமரராய்த் தேற்றும்கொடி - எந்தக்
     கேட்டிலும் நன்மையே நாடும்கொடி;
அழுதவாய் சிரித்திடப் பார்க்கும்கொடி - ஏழை
     அடிமையை ஆண்டானா யாக்கும்கொடி.

888 செய்யாத் தவங்கள் சிறைச் சாலையிற் செய்தோர்க்கின்று
     சிறந்த வரமளிக்கும் தெய்வீகக்கொடி;
ஐயோஎன் றடிபட்டு விழுந்தவர் தம் - நோய்
     அகற்றுஞ் சீவினியாய் அமைந்தகொடி.