Untitled Document
976 | | நீதி வளர நிதிவளர நல்லறிவின் சோதி வளர்ந்தெங்கும் தோன்றவே - ஓதுபுகழ்ச் சித்திரைநாள் வந்த திருவாளன் ஏந்துமுடி நித்தமும் வாழ்க நிலத்தது. |
977 | | பார்வதிபாய் கண்குளிரப் பாவணர் சொற்குளிர நேர்வதியும் வஞ்சி நிலங்குளிரத் - தார்மௌலி சித்திரைமன் ஏந்தித் திருவனந்தை மாநகரில் எத்தினமும் வாழ்க இனிதுது. |
978 | | நாட்டுக் கணியாகி நன்மைக்கு வித்தாகிப் பாட்டுக் கினிய பயனாகி - ஊட்டிநிதம் குஞ்சணைக்கும் தாய்போல் குடியணைக்கும் சித்திரைமன் வஞ்சிநிலம் வாழ்க மகிழ்ந்து. |
சித்திரை மன்னர் பிறந்தநாள் விழா |
979 | | பூவால் பசுங்கொடியும் புன்சிரிப்பால் கைம் மகவும் நாவால் இளங்கிளியும் நன்கோதும் - மூவாத சீமான் அனந்தைத் திருமால் அடிமறவாக் கோமான்தன் ஆட்சிக் குணம். |
980 | | ஈசன் அடியார் எவருக்கும் ஆலயத்தின் வாசல் வழிதிறந்த மாமன்னன் - நேசமிகு புத்தர் அசோகர் புகழையெலாம் - தன்புகழா நித்தமும் கொண்டான் நிலத்து. |
981 | | வஞ்சி வளநாடு வானவர்நா டென்றுலகில் செஞ்சொற் புலவரெலாம் செப்பவே - விஞ்சியபால் ஆழியிற் கண்வளரும் அண்ணல் அருளால் என்றும் வாழிநம் சித்திரை மன் |
982 | | ஆண்டபெரு நாடும் அரசும் அரும்புலவர்க்கு ஈண்டு பரிசில்என அளித்துப் - பூண்டசுவைச் செந்தமிழைக் கேட்டுவக்கும் சேரகுலம் இந்நிலத்துச் சந்ததம் வாழ்க தழைத்து. | |
|
|