பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு151

Untitled Document
121. வெ.ப. சுப்பிரமணிய முதலியார்
983 எண்பதாண் டான இளைஞனே, இன்னமுதின்
பண்பெலாங் காட்டுதமிழ்ப் பாவலனே - நண்பனே
வெள்ளகால் செல்வனே, வேள்சுப் பிரமணிய
வள்ளலே, வாழ்க மகிழ்ந்து!

122. கு. ஆறுமுகம் பிள்ளை
984 பாரறிய நாவலர் பட்டமும் பொற்கிழியும்
பேரறிஞன் ஆறுமுகன் பெற்றனனே - காரெழுந்து
பெய்யும் மழைபோல் பெருஞ்சொல் மழை பொழிந்தது
சைவம் தழையவைத்த தால்.

123. டி.கே. சிதம்பரநாத முதலியார்
985 கன்னித் தமிழேபோல், கம்பன் கவியேபோல்,
மன்னும் பொதிகை மலையேபோல் - பன்னுநம்
நாடு மகிழச் சிதம்பர நாத நண்பா!
நீடுநீ வாழ்க நிலைத்து.

986 அன்னைதமிழ்ச் செல்விக்கு அருந்தொண்டு செய்தின்னும்
மன்னுலகில் பல்லாண்டு வாழியவே - என் இனிய
நண்பா! சிதம்பர நாதா! நம் மாமுருகன்
கண்பார்த் தருளக் கனிந்து.

987 குற்றால நாதா! குழல்வாய் உமைபங்கா!
பொற்றாள் பணிந்துன்னைப் போற்றுகின்றேன் - கற்றார்தம்
சிந்தை மகிழச் சிதம்பர நாதநண்பன்
சந்ததம் வாழவரம் தா.

124. மனோன்மணியம் சுந்தரனார்
988 ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த
பேரா சிரியர் பெருமானைச் - சீராரும்
வஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை,
நெஞ்சமே! நித்தம் நினை.