பக்கம் எண் :

152கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

989 தாலம் புகழும் திருஞான
     சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த
கால மதனை ஆராய்ந்து
     கற்றோர் மெச்சக் கணித்திட்டோன்,
ஆலப் புழைமா நகருடைய
     அறிஞன் பெருமாள் அரும்புதல்வன்,
சீலஞ் சிறந்த சுந்தரனைச்
     சிந்தை மகிழ்ந்து போற்றுவமே,

990 தில்லைப் பெருமான் அருள்பெற்றுச்
     செல்வன் நடரா ஜனைப்பெற்றேன்,
நெல்லை இந்து கலாசாலை
     நிறுவித் தலைமை தாங்கிநின்றோன்,
சொல்லி லமுதம் கனிந்துசுவை
     சொட்டச் சொட்டக் கவிதருவோன்,
நல்லன் பஹதூர் சுந்தரனை
     நாளும் நாளும் போற்றுவமே.

991 ஊக்கம் குன்றி உரம்குன்றி
     ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி,
ஆக்கம் பெருக, அறிவோங்க,
     ஆண்மை வளரச் செய்து, உலகில்
மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த
     விறலோன் நமது சுந்தரனைப்
பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம்
     பாடி இனிது போற்றுவமே.

992 தேடி வைத்த செல்வமெலாம்
     திரைகொண் டோட வருந்திமுகம்
வாடி மெலிந்த தமிழணங்கு
     மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட,
நாடும்அரிய மனோன்மணிய
     நாட கத்தைச் செய்தளித்த
நீடு புகழோன் சுந்தரனை
     நித்தம் நித்தம் போற்றுவமே.