பக்கம் எண் :

18கவிமணியின் கவிதைகள்

Untitled Document
15. இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

76.   ஓடும் பொன்னும் ஒன்றெனவே
     உறுதி கண்ட உள்ளத்தான்,
ஏடும் குருவும் இல்லாமல்
     யாவும் அறிந்த பேரறிஞன்,
ஈடில் அருள்மா முனிவன்ஸ்ரீ
     இராம கிருஷ்ணன்
திருநாமம் நாடும் நகரும் போற்றிடயெந்
     நாளும் வாழ்க வாழ்கவே!

வேறு

77.   பார்தனிலே வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்.
     பத்தினியைச் சோதரியென் றெண்ணி வாழ்ந்தோன்;
கூர்மதியால் எக்கலையும் தானே கற்றோன்
     குணக்குன்றாம் ராமகிருஷ்ணன் பரம ஹம்ஸன்;
சீர்மிகுந்த மெய்ஞ்ஞானி தெரிந்து ரைத்த
     செம்மொழிகள் சிந்தையினிற் சேர்த்தோரென்றும்
பேர்பெருக நீடிந்த உலகில் வாழ்ந்து
     பேரின்ப வாழ்வினையும் பெறுவர் மாதோ!

78.   பாரிலரும் புகழபுபடைத்த பரமஹம்ஸன்,
     பாரதத்தாய் செய்ததவப் பயனாய் வந்தோன்;
நீரொழியப் பாலுண்ணும் நெறியில் ஆய்ந்து,
     நிலையான உண்மைகளை நெஞ்சிற் கொண்டோன்;
கூரியமா மதிவிவே கானந் தற்குக்
     கோதிலா மெய்ஞ்ஞான குருவாய் நின்றோன்;
சீரியநம் ராமகிருஷ்ண தேவன் பாதம்
     சென்னிமிசைக் கொண்டுநிதம் சேவிப்போமே!

வேறு

79. வங்கம் அளித்தமகான் வையம் புகழுமான்
தங்கக் குணங்குடியாய்த் தங்குமகான் - மங்கையரைத்
தீண்டியறி யாதமகான் ஸ்ரீராம கிருஷ்ணனெனை
ஆண்டருள்க, நெஞ்சில் அமர்ந்து!