பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு183

Untitled Document
183. கலைமகள்
1135 பொன்படைத்த பேரைப் புகழ்ந்தபுலை நீங்கியினி
இன்படைய நாவேநீ எண்ணுவையேல் - அன்பெழுந்து
செந்தமிழைக் காத்தருளுந் தெய்வமென இந்நிலத்து
வந்த கலைமகளை வாழ்த்து.

1136 காலத்துக் கேற்றவுடை காலத்துக் கேற்றநடை
காலத்துக் கேற்றவணி கைக்கொண்டு - காலத்தில்
தப்பாது காட்சிதருங் தாயாங் கலைமகளிங்
கெப்போதும் வாழ்க இனிது.

1137 மண்டுபுகழ்ப் பொங்கல் மலராக மக்களெலாம்
கண்டுதொழ வந்த கலைமகள்நீ - தண்டமிழ்ப்
பூங்காவில் எங்கும் புதிய மணம்வீசி
நீங்காமல் வாழ்க நிலைத்து.

184. தினமலர்
1138 பொங்கல் தினமலர்நீ பூவுலகில் என்றென்றும்
மங்கல நாண்மலராய் வாழ்கவே - செங்கமலக்
கண்ணன் அரவணையில் கண்வளரும் கார்மேக
வண்ணன் அருளால் வளர்ந்து.

1139 ஈசன் அருளால் எழுத்தாளர் ஒத்துழைப்பால்;
வாசகரின் ஆசி வலிமையால் - செய்யதமிழ்
தென்னந்தை பூத்த தினமலர் வாடாது
மண்ணுலகில் வாழ்க வளர்ந்து

1140 மக்களுக்கு நல்வாழ்வு வாழும் வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டும் தினமலர்நீ - எக்கணமும்
வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுக
நீடாழி சூழும் நிலத்து.

1141 ஐயம் அறவே உண்மைகளை
     ஆராய்ந் தெவர்க்கும் அஞ்சாமல்
செய்ய தமிழில் எடுத்தோதும்
     திருவனந்தைத் தினமலர் நீ
ஐயன் முருகன் திருவருளால்
     அறிஞர் போற்றிப் பாராட்ட
வையம் மீது நீடூழி
     வாழ்க வாழ்க வாழ்கவே.