பக்கம் எண் :

212கவிமணியின் கவிதைகள்

Untitled Document
இரங்கல் பாடல்கள் (14)

235. திருமூல மன்னர்

1271 தொக்க கொல்லம் ஆயிரத்துத் தொண்ணூ ற் றொ டொன்பதினில்
பக்கமதி ஆடியிரு பான்மூன்றில் - மிக்க குரு
வாரமதில் நள்ளிரவில் மாமூல மன்னவன் இத்
தாரணியின் வாழ்வுநீத் தான்.

1272 திருமால் திருவடிபோய்ச் சேர்ந்துதிரு மூலப்
பெருமான் பெரும்பேறு பெற்றான் - உருமேங்கு
விண்மழை போல வியன்வஞ்சி மாதழுத
கண்மழை வெள்ளங் கடந்து

1273 பொய்யுடலைக் கொண்டு புகழுடலைக் கண்டஞ்சி
வையகம்விட் டோடும் மறலியே - ஐயமறக்
கற்றுத் தெளிந்த கவிவாணர் சொல்வீர
வெற்றி உனக் குண்டோ? விளம்பு.

236. தாகூர்

1274 அலைவளைத்த புவிமுழுதும் அளந்தபெரும்
புகழுடையான் அரசர் கண்டு
தலைவளைத்து வணங்குமொரு குருதேவன்
சலியாது தரணிமீது
கலைவளர்த்த கவியரசன் தாகூரின்
றெம்மை யெல்லாம் கைவிட்டு, ஐயோ!
மலைவிளக்கும் மறைந்ததென மறைந்திட்டான்!
என்னேஇம் மனித வாழ்க்கை!

237. சரோஜினி தேவி

1275 காந்தி திருவடியோ? கற்பகமோ? வாணியமுது
ஏந்தும் எழிற்கரமோ? யாரறிவார்? - ஆர்ந்தபுகழ்
மங்கை சரோஜினியாம் வண்ணக் கிளியின்று
தங்கி யிருக்குமிடம் தான்.