பக்கம் எண் :

220கவிமணியின் கவிதைகள்

Untitled Document
249. ராஜா ஸர். அண்ணாமலைச் செட்டியார்

  1310 புண்ணியங்கள் பலபுரிந்தோன்
     புவிநிறைந்த புகழுடையோன்
     புலவர் போற்றும்
கண்ணியவான் தில்லையிலே
     கலைவளரப் பெருங்கழகம்
     கண்ட கோமான்
தண்ணளியான் நுண்ணறிவோன்
     தனவணிகர் குலஞ்செய்த
     தவத்தால் வந்தோன்
அண்ணல் அண்ணா மலைமன்னை
     இழந்துலகம் அருந்துயரில்
     ஆழ்ந்த தம்மா!

1311 அன்பின் கடலை அமுத மொழியரசை
துன்பம் துடைத்தருளும் தோன்றலை - இன்பமெழப்
பொன்னாடை தேர்ந்தெனக்குப் போர்த்த பெருந்தகையை
எந்நாள்யான் காண்பேன் இனி!

250. பொன்னையா

1312 அன்னையே போல அருந்தமிழை ஆதரித்த
பொன்னையா விண்ணுலகம் போயினனே! - மன்னுபுகழ்ப்
பாவலர் நாவலர் பத்திரிகை ஆசிரியர்
யாவரும் தேடியழ இங்கு.

251. கே.ஜி.சங்கரய்யர்

1313 ஐயமறக் கற்றவனை ஆராய்ச்சி வல்லவனை
செய்வனவெல் லாம்திருந்தச் செய்பவனை - மெய்யன்பு
தங்கும் மனத்தவனை சங்கரய்ய மாமணியை
எங்குநாம்காண்போம் இனி!

252. ஆர்.கே. சண்முகம் செட்டியார்

1314 மன்னாதி மன்னர் மதிக்கும் மதிப்புடையான்
பொன்னாடை வந்தெனக்குப் போர்த்தமகான் - தென்னாட்டுச்
சிங்கவே றான திருக்கோவைச் சண்முகனை
எங்கேநான் காண்பேன் இனி!