பக்கம் எண் :

222கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1322 புன்னகை பூத்துப் பொலியும் முகத்தழகன்
கன்னலைச் சொல்லிற் கலந்தளிப்போன் - மன்னுபுகழ்ச்
செந்தமழ்ச் செல்வன் சிதம்பர நாதனை நான்
எந்தநாள் காண்பேன் இனி!

1323 அன்னைபோ லென்னை அருவியில் நீராட்டி
இன்னமுதும் பக்கத் திருந்தூட்டித் - தன்னொடு
தங்குதங் கென்று சொன்ன தங்கக் குணத்தானை
எங்குநான் காண்பேன் இனி!

1324 தண்பொருநை நெல்லைத் தமிழர் குலதிலகன்
நண்பன் சிதம்பர நாதனைப்போல் - பண்பமைந்த
பாவின் நயமறிந்த பாவலரைப் பாராட்ட
யாவருள ரையா இனி?

1325 என்னருமை நண்பா! இனிய கலைரசிகா!
தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! - மன்னுமுளம்
தத்தளித்து நின்றன் சரகமவி பாடுதற்கோ
இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?

வேறு

1326 அம்பொன் நகரில் அமர்ந்திடினும்
     அமுதே உணவாய் அருந்திடினும்
கம்பன் கவியைப் பாடாமல்
     கன்னித் தமிழைப் பேசாமல்
உம்பர் உலக வாழ்க்கையிலுன்
     உள்ளம் மகிழ்ச்சி கண்டிடுமோ?
நன்பன் பாதம் மறவாத
     நண்பர் ரசிக மாமணியே!

1327 உள்ளக் கலைப்பண் பொளிரும் முகத்தானைத்
தெள்ளமுதம் அன்னகுண சீலனை - வள்ளலைச்
செந்தமிழ்ச் செல்வச் சிதம்பர நாதனை நான்
எந்தநாள் காண்பேன் இனி.