பக்கம் எண் :

286கவிமணியின் கவிதைகள்

Untitled Document
என்று இப்படியாய் எக்கா ரியங்களும்
சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி,
அரங்கு நடையின் அருகாய் ஓர் மலைப்
1545 பாம்பு போலப் படுத்துக் கொண்டாள்.
நினைக்க நினைக்கஎன் நெஞ்சு வேகுதே
ஐயோ! சிவசிவ! அரஹார! அரஹார!
போதும், போதும், இச்சன்மம் போதும்!
பட்ட துயரமும் பாடும் போதும்

1550 கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும்,
பரந்த சட்டி படிக்க மானதும்
பாலும் அன்னப் பாலே யானதும், இனி
எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா!

1555 மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு
ஏதும் புதுமை இவற்றில் உண்டோ?
ஈனாப் பேச்சிபோல் எங்களை வெருட்டின
மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை.
காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ?

1560 இயற்கையை மாற்ற யாரால் முடியும்?
இவையெல்லாம் அல்ல, என்றென்றைக்கும் என்
மனத்தி லிருந்து வாளா யறுப்பது !
நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது!
மற்று அக்காரியம் வையக மெல்லாம்

  1565   அறியும் படியான் அறைவேன், அம்மா!
கணவரின் மரண காலத்து அங்கு
வந்திருந்தவர் என் மகனை நோக்கி,
"தம்பி! உன் தந்தை தலைமாட் டிருந்து,
தீருவா சகத்தில் சிற்சில பதிகம்

  1570   படி" யெனச் சொல்லிப் பண்ணை வீட்டி
லிருந்து ஒரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர்.