Untitled Document 1459 | | ஒருநாள் பகலில் உச்சியம் பொழுதில் அரண்மனை யருகில் அணிமலர் மலர்ந்து நறுமணம் வீசுமோர் நந்த வனத்தில் தழையும் பூவும் தலையில் தாங்கிக் கோயிலில் நட்டஓர் கொடிமரம் போல வளருமோர் அசோக மரத்தின் நிழலில் மாயா தேவி வந்து நின்றனள். நிற்கவே, உரிய காலம் உறுவதை உணர்மரம், உணராப் பொருளெதும் உலகினல் இல்லை; மலர்முடி வணங்கி வளைந்து கவிந்தொரு தழைவீ டாகச் சமைந்து நின்றது. பாரிடம், பன்மலர் மலர்ந்தொரு பஞ்சணை யாயது; பக்கத் தெழமொரு பாறையும் பிளந்து, மதலையை ஆட்ட மஞ்சன நீரை ஓடும் அருவியாய் ஒழுக விட்டது. தேவி, நோவு நொம்பலம் நோக்கா டின்றியோர் மகவினைப் பெற்று மகிழ்ச்சி யுற்றனள். மகவின் அழகிய வடிவினில் அமைந்த எண்ணான் கரிய இலக்கணம் கண்டு, இது தெய்விக மகவெனச் செப்பினர் தெரிந்தோர். சோபன மறிந்து சுத்தோ தனனும் தாயை மகவொடு தண்டிகை ஏற்றி அரண்மனை உய்த்திட ஆணை யிட்டானன். தண்டிகை அந்நாள் தாங்கிட வந்தவர், மாநில மீது மனிதர் அனுதினம் செய்யும் வினைகளைச் செப்பே டுகளில் தீட்டி நான்கு திசைகளும் நின்று காக்கும் காவலர் கனக மால்வரை வாழிடம் விட்டு வந்த தேவரென்று உண்மை யுணர்ந்தோர் உரைக்கின் றனரே. | 15 |
| |
|
|