பக்கம் எண் :

302கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு
1467 உண்மையிது சிறிதேனும் உணரா னாகி
ஒப்பரிய சுத்தோத னப்பேர் மன்னன்,
அண்மையில் நேர்ந்தது, அபசகு னமென்ன
அயர்ந்து மனம்வாடி யங்குஇருந்த காலை,
23
வேறு
1468 கற்ற பெரியோர் கனாநூல் அறிந்தவர்கள்
கொற்றமுடி மன்னவனைக் கோயிலிலே சென்றுபணிந்து
"உலகம் முழுதும் ஒருகுடைக்கீழ் ஆளுமன்னன்,
அலகில் புகழுடையான், ஆண்மைத் திருவுடையான்,
ஓரா யிரமாண்டுக்கு ஒருமுறை தோன்றுமவன்.
சீரார் பெருமான், உன் செல்வமக னாய்வந்தான்;
எண்ணற் கரியபேறு ஏழுபெரும் பேறுஇந்த
மண்ணில் அவனுக்கு வாய்த்திருப்ப துண்டுஐயா!
தெய்வீக மான திருவாழி ஒன்றாகும்;
எய்தற் கரிய இரத்தினம் ஒன்றாகும்;
ஆகாய வீதிசெலும் அசுவமும் ஒன்றாகும்;
வாகான வெள்ளை வாரணமும் ஒன்றாகும்;
மதியிற் சிறந்தவொரு மந்திரி தானுண்டு;
சதுரில் தளராவோர் தளகர்த்தன் தானுண்டு;
காலைத் திருவின் கவினிற் சிறந்தநங்கை
கண்ணியொரு தேவியும் உண்டு" என்றார்
24
வேறு
1469 இவ்வரிய பேறெல்லாம் எய்தற் கான
இம்மகனைப் பெற்றுமகிழ் கொண்டு மன்னன்,
"திவ்வியமா நகரெங்கும் சிறப்புச் செய்து
திருவிழாக் கொண்டாட வேண்டும்" என்றான்.
25
வேறு
1470 மாநகர் வீதி விளக்கிநின்றார் - குலை
வாழைகள் வாசலில் கட்டிநின்றார்;
வானுயர் தோரணம் நட்டுநின்றார் - எங்கும்
வாசமெழு பன்னீர் வீசிநின்றார்.
26