பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு311

Untitled Document
3. காதல் பிறந்த கதை

1503   "அறிவின் செல்வரே! அமைச்சரே! நீவிர்
அசிதமா முனிவன் அந்நாள் உரைத்ததும்,
கனாநூல் கற்றவர் கணித்துச் சொன்னதும்
அறிவீர் என்பதில் ஐயமொன்று இல்லை,
என்னுயி ரனைய என்மகன் உலகில்
பகைக்குலம் வேரறப் பறித்துக் களைந்து,
மன்னர் மன்னனாய் மணிமுடி சூடித்
தரணி முழுவதும் தனியர சாளுவான்;
என்னுள் விருப்பமும் இதுவே யாகும்.
அன்றேல்,
ஆசையை அடியோடு அகழ்ந்து நீக்கி,
முற்றத் துறந்த முனிவ னாகி,
நாடு விட்டு நகரும் விட்டுக்
காட்டில் சென்று கடுந்தவம் புரிவான்;
பெறுதற் கரிய பெருந்திரு வெல்லாம்
இகழ்ந்து தவத்தால் எய்திடும் அந்த
இன்பம் யாதோ? யானெதும் அறியேன்.
ஆயினும்,
என்மகன் நோக்கம் இதுவே யாகும்;
அரண்மனைச் செல்வம் அனைத்திலும் ஆசை
சிறிதும் அவன்தன் சிந்தையில் இல்லை.
ஆதலின்,
நீள்நிலம் புரக்கும் நெறியின் மீது அவன்
உள்ளம் திரும்ப உபாயம் இதுவென,
ஆய்ந்து நீவிர் அறைதல் வேண்டும்;
விரும்பிடில் இந்த மேதினி முழுதுமே
ஆளவான் இவனென்று அறிஞர் அந்நாள்
ஓதிய மொழியும் உண்மை மொழியாய்
நெடுநாள் இங்கு நிலைத்திடல் வேண்டும்,"
என்று மன்னன் இயம்பினன். அதுகேட்டு
அமைச்சர் நாயகன் அறமுது கிழவன்
எழுந்து நின்று, "எம் இறைவனே, கேளாய்;