பக்கம் எண் :

334கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1564 வையகந் தன்னில் உயிர்களின் மீதருள்
     மாரி பொழியும் பெரியவனாம்
ஐயனைக் கண்டவர் கொண்ட அதிசயம்
     ஆராலே கூற இயலுமடி!
120
1565 வாயிலைக் காத்திடும் சேவகரும் - வழி
     மாறா விலகி ஒதுங்கிநின்றார்;
தாயினும் மிக்க தயாளன் இவன் - போல்இத்
     தாரணி கண்டதும் உண்டோஎன்றார்.
121
1566 பாதையிற் சென்றவர் பார்த்துநின்றார் - ஒரு
     பக்கமாய் வண்டிகள் ஓட்டிநின்றார்;
மாதவம் ஈதலால் வேறுளதோ! - என
     வாயார வாழ்த்திப் புகழ்ந்துநின்றார்.
122
1567 சந்தை இரைச்சல் அடங்கியது! - கடைச்
     சண்டையும் இல்லா தொடுங்கியது!
வந்தவர் போனவர் கண்களுக்கும் - அந்த
     வள்ளல் முகம் விருந் தானதம்மா!
123
1568 கூடம் எடுத்தகை தாழ்ந்திடாமல் - ஒரு
     கொல்லனும் கண்டு திகைத்து நின்றான்;
ஊடுபா வோட்டிய சாலியனும் - நூலை
     ஒட்டி முடியாது விட்டுவந்தான்.
124
1569 மண்ணைச் சுமந்து வருங்குயவன் - ஈதோர்
     மாமுனி என்று வணங்கி நின்றான்;
எண்ணெய்க் குடமேந்து வாணியனும் - இவர்
     யாரோ பெரியர் எனப் பணிந்தான்.
125
1570 பள்ளிச் சிறுவரும் சாடிவந்தார் - அவர்
     பக்கத் தண்ணாவியும் ஓடிவந்தார்;
கள்ளரும் உள்ளம் மறந்துநின்றார் - வட்டக்
     காரரும் காசுப்பை விட்டுவந்தார்.
126
1571 மாடும் அரிசியைத் தின்றதம்மா! - அதை
     மாற்றி யடிப்பாரும் இல்லையம்மா!
வீடும் திறந்து கிடந்ததம்மா! - உலை
     வெந்திடும் சோறும் குழைந்ததம்மா!
127