1572 | | பெண்டுகள் வாசலில் கூடிநின்றார் - இந்தப் பேரரு ளாளனும் யாரோஎன்றார்; கண்டவர் உள்ளம் கனியுதென்றார் - இவண் கண்ணின் அழகினைப் பாரும் என்றார் | 128 |
1573 | | கன்னி ஒருமகள் மையெழுதி - இரு கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்; பின்னும் ஒருமகள் கூந்தலிலே - சூடும் பிச்சி மலர்கையில் சுற்றிவந்தாள். | 129 |
1574 | | பாலுக் கழுத மதலையுமே - ஐயன் பக்கம் வரக்களிப் புற்றதென்றால், சேலொக்கும் மாதர் விழிகள் - அவன்முகச் செவ்வியில் ஆழ்வது அதிசயமோ! | 130 |
1575 | | கண்ணிற் கருணை விளங்குதென்றார் - நடை கம்பீர மாகவுங் காணுதென்றார்; எண்ணில் இடையனும் ஆகான் என்றார் - இவன் இராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்; | 131 |
1576 | | யாகப் பசுவை எடுத்துவரும் - இவண் எண்ணரும் பக்தி யுடையன் என்றார்; மாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர் மாதவச் செல்வன் இவனே என்றார். | 132 |
1577 | | செம்பு நிறைந்துபால் சிந்திடவே - சிலர் சிந்தை மறந்து கறந்துநின்றார்; எம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம் எங்ஙனம் சொல்லி முடிப்பேன், அம்மா! | 133 |