பக்கம் எண் :

412கவிமணியின் கவிதைகள்

Untitled Document
31. சிந்தனை செய்வோம்
இராகம் - உசேனி     தாளம் - ஆதி
பல்லவி
1815 சிந்தனை செய்வோமே! தினம்தினம்
     சிந்தனை செய்வோமே!
கண்ணிகள்
செஞ்சடை யீசனை
     சிற்றம் பலத்தானை,
நஞ்சுண்ட கண்டனை
     நாகா பரணனைச
(சிந்)
கல்லானை உண்ணக்
     கரும்பை அளித்தானை,
வில்லாக வேமேரு
     வெற்பை வளைத்தானைச்
(சிந்)
    பார்த்தன்கை வில்லினால்
     பண்டடி பட்டோனை,
ஆத்தி மலர்சூடும்
     அம்பிகை பாகனைச்
(சிந்)

  கண்ணப்பன் பூசைகொள்
     காளத்தி நாதனை,
உண்ணப் பலிதேடி
     ஊரூர் அலைவானைச்
(சிந்)

  கற்புணை யாகக்
     கடலைக் கடந்தவன்
அற்புதப் பாடல்கேட்
     டானந்தம் கொள்வோனைச்
(சிந்)

  வையம் புகழ்திரு
     வாசகம் தீட்டித்தன்
கையெழுத் திட்ட
     கனக சபையானைச்
(சிந்)