Untitled Document
பிழைத்தீர்; இனிப் பிழையீர்’ என்று கூறுதலும், இதற்குப் பதிலாகத் திருடர்கள் அவரை அடிக்கச் செல்லுவதும் நகைச்சுவை உணர்ச்சியைத் தோற்றவிக்காதபடி இருக்க முடியுமா? இவ்வுணர்ச்சியை எழுப்பக்கூடிய நூல்கள் தமிழில் பல இருக்கின்றன. பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் இயற்றிய ‘சபாபதி’ என்னும் நாடகம் நகைச்சுவையிலே தோய்ந்திருக்கிறது. வில்லியப்ப பிள்ளையின் பஞ்சலட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கிஷமாகவுள்ளது. வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதையில் நகைச்சுவை ததும்புகிறது. கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் அங்கங்கே நகைச்சுவை குமிழியிட்டு ஒழுகுகிறது. சங்கச் செய்யுட்களிலும் ஏகதேசமாய் இந்த நகைச்சுவை தலைக்காட்டி இன்பமூட்டுகிறது. உதாரணமாக, திருந்திழாய் கேளாய் நம் ஊர்க்கெல்லாம் சாலப் பெருநகை அல்கல் நிகழ்ந்தது | என்ற கலித்தொகையைக் (65) காண்க. பத்திரிகையுலகிற்கூட நகைச்சுவை புகுந்து விட்டது. இக்காலத்தே தமிழ்நாட்டில் நகைச்சுவை மலிந்த பத்திரிகைகளே இருபாலராலும் போற்றப்படுகின்றன. ஹாஸ்யத்தையே பெரும்பான்மை மக்கள் பெரிதும் விரும்புகிறவர்கள் என்பதை உணர்ந்து சினிமாப்படக் கர்த்தர்களும் இந்தச் சுவையுடையக் கதைகளேயே படம் பிடிக்கின்றனர். ஆனால் இங்கே கூறிய நகைச்சுவைப் பகுதியெல்லாவற்றிலும், ஆழ்ந்தஉணர்ச்சியில்லை; ஆழ்ந்த பொருளில்லை; நிலைத்த பயனில்லை; கணநேர மகிழ்ச்சியையே நமக்குத் தந்து அதனோடு ஒழிகிறது. இகழ்ச்சிச் செயலும் இவ்வாறுதான். விருப்பு வெறுப்பு மக்களியற்கையில் ஒன்றிக் கிடப்பவையே. வெறுப்பின் உருவவேறுபாடே இகழ்ச்சி யென்பது. நமது தினசரி வாழ்க்கையில் இவ்விகழ்ச்சி அடிக்கடி புலப்படுவதொன்றே. இலக்கியங்களிலும் இது மிகுதியாகக் காணப்படுகிறது. தமக்குப் பொருள் கொடாத ஒருவரைக் குறித்து ஒரு புலவர்.
பாரி ஓரி நள்ளி எழினி ஆஅய் பேகன் பெருந்தோள் மலையன் என்று எழுவருள் ஒருவனும் அல்லை, அதனால் நின்னை நோவது எவனோ! அட்டார்க்கு உதவாக் கட்டி போல நீயும் உளையே நின் அன்னோர்க்கே; யானும் உளனே தீப்பா லோர்க்கே; குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகுபால் அன்னஎன் சொல்உகுத் தேனே! | (தொல்-செய்யுளியல், 125, உரை) | |
|
|