பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு 53

Untitled Document
343 காட்டுத் தினைக்கதிரைப் - பறித்துநீ
கண்டித் தருந்தாமல்,
கூட்டுக் கெடுத்தோடும் - குறிப்பெது
கூறுவையோ? கிளியே!

344 ஒன்றை யொருகாலில் - நின்றுகனி
உண்ணும் அரியவித்தை
கற்றதும் யாவரிடம்? - அவரைநீ
காட்டுவையோ? கிளியே!

345 கானத் தினைப்புனத்தில் - குறமகள்
காவலிற் கொள்ளையிடல்
ஈனச் செயல் அல்லவோ? - குலத்துக்கு
இழுக்கமும் வந்திடாதோ?

346 செம்பவழ வாயைத் - திறந்துநீ
செப்பும் மொழிகேட்கில்,
உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து
ஓடி யொழுகும், அடி!

347 கொம்பிற் கொலுவிருந்து - களித்துநீ
கூவுங் குரல்வருமேல்,
பம்பி யெழுஞ்சோலை - எனக்குப்
பரம பதம் அடியோ!

348 உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகொளவே,
பண்ணிற் கலந்திடநீ - தெரிந்துசெய்
பக்குவம் ஏதடியோ?

349 பேசும் மரகதமே! - உனைத்தினம்
பேணி வளர்த்திடுவேன்;
ஆசை யமுதமொழி - அளிக்கநீ
அண்டையில் வந்திடாயோ?

350 பண்ணுக் சிசைந்ததம்மா! - பழத்தொடு
பாலுங் கலந்ததம்மா!
மண்ணுக் கமுதமம்மா! - உனதுசெய்
வாய்மொழி, தந்தையம்மா!