முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 559 |
Untitled Document இசை இலக்கணமுணர்ந்தோரே கீர்த்தனம் இயற்ற வேண்டும்என்ற கொள்கையும் பொருத்தமற்றது. ரம்பரை வழக்கும் அதுவன்று. பரிபாடலை எடுத்துக் கொண்டால் செய்யுள் இயற்றியவர் வேறு, பண் முதலியன ஊட்டியவர் வேறு. தேவாரத்தை எடுத்துக்கொண்டால்அதுவும் அப்படியே, ஞானசம்பந்தர், அப்பர் முதலிய அடியார்களது திருப்பாடல்களுக்கு ஆதியில் அமைந்த பண் முறை இப்போது இல்லை. அப் பண்முறை பிற்காலத்தில் மறைந்து விட்டமையால், புதிதாகப் பண் அமைத்தனர்என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. பாவத்திற்குத் தக்கபடி இராகதாளங்களை அமைத்தல் ஒரு தனிப்பட்ட திறமை, அத் திறமை கீர்த்தனங்களை இயற்றுபவர்களுக்கு வேண்டுவதன்று. அவ் வகைத் திறமை படைத்தவர் பலரும் இலக்கியச்சுவையின்றிப் பாடுவார்கள். பாவம் என்பதனை ஒரு பொருளாகவே அவர்கள் மதிக்கமாட்டார்கள். ஓசையினிமை மட்டும்தான் அவர்கள் சிறப்பாகக் கருதுவார்கள். இவ்வகைச் சங்கீத நிபுணர்களுக்கு உதாரணமாகப் பட்டணம் சுப்பிரமணிய ஐயரைக் கூறலாம். இன்றும் அவரது கீர்த்தனங்களைப் படிப்பது பாவத்தின் பொருட்டல்ல; இலக்கியச் சுவையின் பொருட்டு மல்ல. ராகலக்ஷணங்களின் அமைதியை அறியும் பொருட்டேயாம். இவர் இயற்றிய கீர்த்தனங்கள் மிகச்சிறப்புடையனவாகச் சங்கீத வித்வான்கள் மாத்திரமே கருதுவார்கள்.
இங்குக் கூறியவற்றை நோக்கினால் இசை வகுத்தவர் கீர்த்தனங்களை இயற்றியவரின் வேறாயிருத்தல் சிறிதும் தவறில்லை என்பது விளங்கும்.
இசைப்பாடல்களைப் பற்றிக் கூறுமிடத்து,அவற்றின் ‘இசையினிமை மக்களின் தினசரி வாழ்வில் நேரும் மலினங்களை யெல்லாம் போக்கவல்லது’ என்று மேல் நாட்டு ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார். இதன் உண்மை தே.வி.யின் கீர்த்தனங்களைக் கற்றுணர்வார்க்கு எளிதிற் புலப்படும்.
திருவனந்தபுரம் ஸ்ர்வகலாசாலை எஸ்.வையாபுரிப் பிள்ளை 4-6-1953 | |
|
|