பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு61

Untitled Document
405 என்று சொல்லி அந்த அப்பத்தினை - வாயில்
     ஏந்திக் கடித்திழுத் தோடிடவே,
கன்றப் பசித்த இளைஞரெல்லாம் - வந்து
     கால்கடுக்கத் தேடிப் போயினரே.

406 ஆரும் அறியாத மூலையிலே - அந்த
     அப்பத்தை அவ்வெலி கொண்டுவைத்துக்
கூரிய பல்லால் கறம்பி ஒருபொடி!
     கூடச்சிதறாமல் தின்றதம்மா!

407 மட்டுக்கு மிஞ்சிப் புசித்ததனால் - மூச்சு
     வாங்கி வருந்தி வயிறூதி,
கட்டப் படுவதைச் சுற்றத்தார் எல்லோரும்
     கண்டொரு பண்டிதர்க் காளும்விட்டார்!

408 பண்டிதர் வந்துகை பார்த்தனர்; - அவ்வெலி
     பண்டம் முழுதையும் உண்டகதை
விண்டதும் கேட்டு, குறிகளும் நோக்கி,
     விதிப்படி ஆய்ந்து விளம்பினரே;

409   அப்பம் முழுதும்நீ தின்றனையே - அதை
     அன்பிற் குரியஉன் தம்பியர்க்கும்
ஒப்பவே பங்கிட் டளித்திருந்தால் - துன்பம்
     ஒன்றும்வந் துன்னை அணுகாதே.

410 'அன்றியும் உன்தம்பி மாரும் கடும்பசி
     ஆறிக் களித்திருப் பார்கள் அன்றோ?
இன்றினிச் செய்வதென் இவ்வுலகம் - விட்டு
     யாத்திரை போவது திண்ணம்' என்றார்.

411 ஆனதனாலே கிடைத்த பொருளை - நாம்
     ஆகும் மட்டும்பகுத் துண்ண வேண்டும்;
ஈனமாந் தன்னயத் தால்வருந் துன்பமே;
     இன்பம் அளிக்கும் பொதுநயமே.

412 அளவு கடந்திடில் ஆரமுதும் - விஷம்
     ஆகும் என்றுநம தான்றோர்கள்
உளபடியே சொன்ன வாக்கியத் துண்மையை
     உள்ளத்திற் கொள்ளுங்கள், தோழர்களே.