பக்கம் எண் :

62கவிமணியின் கவிதைகள்

Untitled Document
62. ஒளவையும் இடைச்சிறுவனும்
413   வேனிற் பருவத்திலே - ஒருநாள்
     வெய்யில் வேளையிலே
ஞானத் தமிழ்க்கடலென் - றிந்த
     நாடு புகழும்ஒளவை.

414 தூரம் மிகநடந்து - களைத்துச்
     சோர்ந்து, வரும்வழியின்
ஓரத்தில் ஓர்நாவல் - நிழலில்
     ஒதுங்கிச் சற்றுநின்றாள்.

415 அந்தமர மீதோர் - சிறுவன்
     ஆநிரை மேய்க்க வந்தோன்,
சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள்
     தின்று நிற்றல் கண்டாள்.

416 "நாவ றளுதப்பா! - நாலைந்து
     நாவற் கனிபறித்து,
தா"வென வேண்ட - அவனும்
     "தருவேன்" என்று சொல்லி,

417 "சுட்ட கனிவேண்டுமோ? - அன்றிச்
     சுடாத கனிவேண்டுமோ?
இட்டமுள்ள கனியைப் - பாட்டிநீ
     இயம்பெ"னக் கேட்டான்.

418 கூறிய அம்மொழியால் - உள்ளம்
     குழப்ப மெய்தியப்பால்
தேறி அவளும், "அப்பா! - சுட்ட
     தீங்கனி தா" என்றாள்.

419 மெத்தப் பழுத்துலைத்து - கறுத்து
     வெடித்த கனியாக,
பத்துப் பதினைந்து - ஒன்றாய்ப்
     பறித்து மண்ணிலிட்டான்.

420   ஒட்டிய மண்நீங்கக் - கனியெடுத்
     தூதி நிற்கையிலே,
"சுட்ட கனியிதெ"னச் - சிறுவன்
     சொல்லி மறைந்திட்டான்.