பக்கம் எண் :

84கவிமணியின் கவிதைகள்

Untitled Document
520 கத்தி காட்டிக் காத்து நின்ற
     காவ லாளரைப் - பல
     காவ லாளரை,
எத்தி விட்டுப் பறந்து சென்றான்;
     என்ன மாயமோ? - ஐயோ!
     என்ன மாயமோ?

521 காலையெழும் கதிரவனும்
     கண்டதில்லையோ? - இதைக்
     கண்டதில்லையோ?
ஓலமிட்டுங் கேட்கவில்லை;
     ஓடுகின்றானே - ஐயோ!
     ஓடுகின்றானே.

522 பூவுலகில் வாழ்ந்ததினிப்
     போதும், போதுமே - எனக்குப்
     போதும், போதுமே;
தேவர்திரு வடிபணியச்
     செல்லுகின்றேனே - இதோ
     செல்லுகின்றேனே.

71. குதிரைகள் புலம்பல்

523 கற்றுத் தெளிந்தநல் மானிடரே! - எம்மைக்
     காக்கப் பிறந்த பெரியோரே!
சற்றும் அறிவிலா எம்மொழிக்குச் - செவி
     சாய்க்கத் திருவுளம் கொள்வீரே!

524 வளர்ந்து வரும்வாலை வெட்டி வெட்டித் - தேய்ந்த
     மாறுபோல் ஆக்கிக் குறைத்திடும்நீர்,
தளர்ந்த பொழுதெங்கள் ஈப்பகை ஓட்டிடத்
     தக்க உதவிகள் செய்வ துண்டோ?

525 இரும்புக் கடிவாளம் மாட்டுவதேன்? - வாயை
     ஈசன் படைத்த திதற்காமோ?
பெரும்புவி மீதினில் உங்களுக்கும் - இந்தப்
     பேதைகள் செய்த பிழைகள் உண்டோ?