‘எவ்வளவு துன்பங்கள் இடையிலே வந்தாலும் எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிட வேண்டும்’ என்ற எண்ணம் அவனுக்கு அப்போதே இருந்திருக்கிறது ! * * *
குதிரைப் பந்தயத்தில் கூட்டத்தைத் திகைக்க வைத்தானே, அதே பையன் அடிக்கடி அப்பாவையும் திகைக்க வைப்பது வழக்கம். ஆம், கேள்வி மேல் கேள்வி கேட்டு அப்பாவைத் திகைக்க வைத்து விடுவான் !
தினந்தோறும், இரவு சாப்பாட்டுக்குப் பிறகு அப்பாவின் அருகிலே போய் அவன் உட்கார்ந்து கொள்வான் ; ‘அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏன் இப்படி இருக்கக் கூடாது?’ என்றெல்லாம் கேள்வி கேட்பான். அவர் அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் கூறுவார். சில சமயங்களில், அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் கூற முடிவதில்லை. அப்போது அவர் திகைப்பார்.
இரவில் அப்பா படுத்த பிறகு கூட அவன் அவரைத் தூங்கவிட மாட்டான். பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான்.
இப்படி, அவன் அடிக்கடி கேள்வி கேட்பது அவனுடைய பாட்டிக்குப் (அப்பாவைப் பெற்றவள்) |