பக்கம் எண் :

12

பெரியோர் வாழ்விலே


     ஒருநாள், அயலூரிலுள்ள ஒரு ஜமீன்தார் வீட்டுக்கு அவன் சென்றிருந்தான். அந்த
ஜமீன்தார் அவனுடைய குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.

     ஜமீன்தார் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவனுக்குக் காய்ச்சல் கண்டது. அந்தக்
காய்ச்சலுடன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான். பரீட்சை நெருங்கிக்
கொண்டிருந்ததால், அன்றே செல்ல வேண்டும் என்று ஜமீன்தாரிடம் தெரிவித்தான்.

     ஜமீன்தார் சிறிது தயங்கினார். பிறகு, “தம்பி, நீ இப்போதே புறப்பட
வேண்டுமென்கிறாய்... சரி, புகைவண்டி நிலையம் வரையிலாவது உன்னைப் பல்லக்கில்
கொண்டுபோய்விட வேண்டாமா? ஆனால், பல்லக்கு வேறு ஓரிடத்திற்குப்
போயிருக்கிறதே ! அது எப்போது வருமோ?...” என்றார்.

     “அதனால் கவலையில்லை. உங்களிடம் குதிரை இருக்குமே, அதைக் கொடுங்கள்.
அதில் ஏறிப் புகைவண்டி நிலையத்துக்குச் செல்கிறேன்.”

     “இப்போது ஒரே ஒரு குதிரை தான் இருக்கிறது. அதுவும் முரட்டுக் குதிரை. தன்மீது
ஏறுகிறவர்களைக் கீழே தள்ளி மிதித்து விடும். பொல்லாதது !” 

     “அப்படியா ! சரி, அது எங்கே நிற்கிறது? நான் பார்க்கலாமா?”

     ஜமீன்தார் அவனை அழைத்துக் கொண்டு குதிரை நிற்கும் இடத்திற்குச் சென்றார்.