பக்கம் எண் :

புலியைத் தேடிப் புறப்பட்டவர்

13


     அங்கே நின்ற முரட்டுக் குதிரையை அவன் பார்த்தான். பிறகு, மெல்ல அதன்
அருகே சென்று அதைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான்.

     உடனே, அந்த முரட்டுக் குதிரை முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு
அவனை மிதிக்க வந்தது ;  பற்களையும் காட்டிப் பயமுறுத்தியது. ஆனால், அவன் சிறிதும்
அஞ்சவில்லை. சற்றுப் பின் வாங்கினான். பிறகு, திடீரென்று தாவி அதன்மேல் ஏறி
உட்கார்ந்து கொண்டான்.

     குதிரைக்கு உடனே கோபம் வந்துவிட்டது. அந்த இடத்தை விட்டு நாலுகால்
பாய்ச்சலில் காற்றாய்ப் பறந்தது.

     அவன் அதை அடக்க முயன்றான். முதலில் முடியவில்லை. அதற்காக அவன் மனம்
கலங்க வில்லை. “ஜமீன்தாரிடம் விடை பெற முடியாமல் போய் விட்டதே !”  என்றுதான்
வருந்தினான்.

     குதிரை வேகமாக ஓடும்போது, எதிரே ஓர் ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றையும்
சாமர்த்தியமாகக் கடந்து எப்படியோ புகைவண்டி நிலையத்துக்கு வந்து
சேர்ந்துவிட்டான் ! அவ்விடத்தை நெருங்கியதும் குதிரையிலிருந்து கீழே குதித்தான்.
அன்றே புகை வண்டியிலேறி ஊர் வந்து சேர்ந்தான்.

     வீட்டை அடைந்ததும், காய்ச்சல் அதிகமாகிவிட்டது. மருந்து சாப்பிட்டும், விட்டு
விட்டுக் காய்ச்சல் வந்தது. அத்துடனே அவன் பி.ஏ. பரீட்சை எழுதினான் ;  அதில்
வெற்றியும் பெற்றான் !