பக்கம் எண் :

24

பெரியோர் வாழ்விலே


இல்லை. அடிக்கடி அவள் ஏதாவது கற்பனை செய்து கொண்டிருப்பாள் ;  கனவு கண்டு
கொண்டிருப்பாள்.

     ஒரு நாள், அவள் வீட்டிலே உட்கார்ந்து ‘அல்ஜீப்ரா’ கணக்கு ஒன்றைப் போட
ஆரம்பித்தாள். விடை சரியாக வரவில்லை. பல முறை போட்டாள் ;  பயனில்லை. அவள்
கவனம் முழுவதும் கணக்கிலே ஈடுபட்டிருந்தால் தானே விடை சரியாக வரும்? அது தான்
வேறு எங்கேயோ சென்று விட்டதே ! 

     சிறிது நேரம் சென்றது. திடீரென்று அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ‘மளமள’வென்று
ஏதோ சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதினாள். எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தாள்.
படித்துப் பார்த்தாளா? இல்லை, இல்லை ! கணக்குக்கு விடையாக இருந்தால், ‘அவள்
படித்துப் பார்த்தாள்’ என்று சொல்லலாம். ஆனால், அவள் எழுதியது விடையன்று ;  ஒரு
கவிதை !  ஆகையால், அதை ‘அவள் பாடிப் பார்த்தாள்’ என்று தானே கூறவேண்டும்.
ஆம், அவள் பாடினாள், அவள் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஒரு சிறந்த
கவியரசியாவதற்குரிய அறிகுறி அச் சின்னஞ்சிறு பருவத்திலேயே காணப்பட்டது.

     ‘உலகம் போற்றும் கவியரசி’ என்று சொன்னதுமே, ‘அவர் யார்?’ என்று நீங்கள்
கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். கவியரசி சரோஜினி தேவியைத் தவிர
வேறு யாரை நாம் அப்படிச் சொல்லப் போகிறோம் !