‘இரும்பு மனித’ராகவும், இடையூறுகள் எத்தனை வந்தாலும் எடுத்த காரியத்தை விடாது முடிக்கும் ஒரு வெற்றி வீரராகவும் திகழ்வான் என்று அப்போது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் !
இப்போது அந்தப் பையன் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சர்தார் வல்லபாய் படேல்தான் அந்தப் பையன் ! * * * படேல் அப்போது நாடியட் என்ற நகரத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்துவந்தார். அவருடைய வகுப்பு ஆசிரியர் படிப்புச் சொல்லிக் கொடுப்பதுடன் நோட்டுப் புத்தகம், பென்சில் முதலியவற்றையும் பையன்களிடம் விற்று வந்தார்.
சம்பளம் போதாததால் இப்படி வியாபாரம் செய்தாவது குடும்பத்தை நடத்தலாம் என்று அவர் நினைத்தார் போலும், இதில் தவறில்லை. ஆனால், அவர் மாணவர்களிடம், “பையன்களா, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் தான் நோட்டுப் புத்தகம், பென்சில் முதலியவற்றை வாங்க வேண்டும். வேறிடத்தில் வாங்கக் கூடாது” என்று உத்தரவும் போட்டுவிட்டார் !
ஒருநாள் படேல் கடை வீதியில் ஒரு நோட்டுப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த நோட்டை ஆசிரியர் பார்த்துவிட்டார். அதைப் பார்த்ததும் அது எங்கோ ஒரு கடையில் வாங்கப் பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார். உடனே அவர் படேலின் அருகிலே வந்தார். நோட்டுப் |