பக்கம் எண் :

40

பெரியோர் வாழ்விலே


அது மிகவும் நயமாக அமைந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது.

     ‘இந்தப் பாட்டை நாம் யாரிடமாவது காட்ட வேண்டும். அவர்களுடைய கருத்தை
அறிய வேண்டும்’ என்று நினைத்தான்.

     ஆனால், பிறரிடத்தில் காட்டுவதற்கு அவனுக்குக் கூச்சம் ;  காட்டாமல் இருக்கவும்
மனமில்லை.

     சிறிது நேரம் சிந்தித்தான் ;  இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தான்.

     அதன்படி, மறுநாள் மிகவும் சீக்கிரமாக அதாவது எல்லோருக்கும் முன்பாகப்
பள்ளிக்குச் சென்றான் ;  தான் இயற்றிய பாட்டை ஒரு தாளில் எழுதினான் ;  ஆசிரியர்
உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்து விட்டுத் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.

     சிறிது நேரம் சென்று மற்றொரு மாணவன் அங்கு வந்தான். அவன் தரையில்
காகிதத்தில் ஏதோ எழுதிக் கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்தான் ;
படித்தான் ; பிறகு தமிழாசிரியரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுத்தான்.

     தமிழாசிரியர் பாட்டைப் படித்துப் பார்த்தார். “அடடா !  இந்தப் பாடல் எவ்வளவு
அழகாயிருக்கிறது !  இதை இயற்றிய கவிஞர் யார்? பெயர் போடவில்லையே !”  என்று
சொல்லிவிட்டுத் திரும்பத் திரும்ப அதைப் பாடி மகிழ்ந்தார் ;  மாணவர்களுக்கும் அதைப்
பாடிக் காட்டினார் ;  பாட்டில் உள்ள சொல் அழகையும் பொருள் அழகையும் எடுத்துக்
கூறினார்.