பக்கம் எண் :

42

பெரியோர் வாழ்விலே


போகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. இதோ என் கையில் தேவாரத் திரட்டு இருக்கிறது.
இதிலிருந்து முதலில் நான் ஒரு பாடலைப் பாடுவேன் ;  பிறகு உங்களிடம் புத்தகத்தைத்
தருவேன்... நீங்கள் புத்தகத்தைப் பார்த்து அதே பாடலை ஒரு முறை படியுங்கள். பிறகு,
நான் புத்தகத்தைத் திரும்ப வாங்கி மற்றொரு முறை அதே பாட்டைப் பாடுவேன். அப்புறம்
நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்தப் பாடலைத் தவறு இல்லாமல்
மனப்பாடமாக ஒப்புவிக்க வேண்டும். சரியாகச் சொல்லுகிறவர்களுக்கு பாட்டு ஒன்றுக்கு ஓர்
அப்பம் அல்லது ஒரு வடை வீதம் தருவேன். எங்கே, பார்க்கலாம் !”  என்று சொன்னார்.

     எல்லோரும், ‘சரி’ என்று கூறித் தலையை ஆட்டினர்.

     போட்டி ஆரம்பமாயிற்று. அப்பமும், வடையும் ஒவ்வொன்றாகக் கவிமணி
அவர்களிடம் சரணடைந்தன. கொஞ்ச நேரத்தில் மொத்தம் இருந்த அப்பம் வடைகளில்
முக்கால் பங்குக்கு மேல் கவிமணியிடம் வந்து சேர்ந்துவிட்டன ! 

     ஆனால், கவிமணி போட்டியில் பரிசாகக் கிடைத்த அந்த வடைகளையும்,
அப்பங்களையும் தாமாகத் தின்றுவிடவில்லை !  எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துத்
தாமும் அவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தார்.

* * *