பக்கம் எண் :

பெயர் தெரியாத கவிஞர்

43


     கவிமணி வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு நண்பர் இருந்தார். அவருடைய
குடும்பத்தில் ஒரு விழா நடைபெற இருந்தது. விழாவிற்கு உறவினர்களும், நண்பர்களும்
ஏராளமாக வருவார்கள்.

     அவ்வளவு பேரும் தங்குவதற்கு அவருடைய வீடு போதாது. ஆகையால், ‘விழாவை
நடத்துவதற்கு தங்கள் வீட்டைத் தந்துதவ வேண்டு’ மெனக் கவிமணியை அவர் கேட்டார்.
கவிமணியும் அதற்கு இசைந்தார்.

     அன்று கவிமணி வீட்டில் ஏராளமான கூட்டம். விருந்து நடப்பதற்கு இன்னும் சிறிது
நேரமே இருந்தது.

     அப்போது வெளியிலிருந்த ஓர் ஆள் வீட்டுக்குள் ஓடிவந்தான். கவிமணியை
நெருங்கி அவர் காதுக்குள், “உங்கள் பெயருக்கு ஒரு தந்தி வந்திருக்கின்றது !”  என்று
மெதுவாகச் சொன்னான்.

     உடனே, கவிமணி எதுவும் கூறாமல் மெதுவாக எழுந்து வந்தார். வாசலில் நின்று
தந்திச் சேவகனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார். அவனிடமிருந்த தந்தியைக்
கையிலே வாங்கினார். ஆனால், உடனே அதை அவர் பிரித்துப் பார்க்கவில்லை. பேசாமல்,
தம்முடைய சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார்.

     இந்தக் காலத்தில் நாம் எடுத்ததற்கெல்லாம் தந்தி கொடுக்கிறோம். பிறந்த நாள்
வாழ்த்து, திருமண வாழ்த்து, பரீட்சையில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து -