பக்கம் எண் :

50

பெரியோர் வாழ்விலே


வெவ்வேறு விதமாக நடத்தப்படுவார்கள். சிலர், வந்ததும் அங்கிருக்கும் ஆடம்பரமான
நாற்காலியில் உட்காருவார்கள். சிலர் தரையிலே உட்காருவார்கள். சிலர் கால் கடுக்க
அப்பாவின் முன் நின்றுகொண்டே பேசுவார்கள். சிலர் வீட்டுக்குள் வராமல் வெளியிலேயே
கைகட்டி நிற்பார்கள்.

     ‘ஏன் இந்த வேற்றுமையெல்லாம்?’ என்று சிறு பையனான விவேகானந்தருக்குப்
புரியவில்லை.

     ‘இவர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன்.
அவனைத் தொடக் கூடாது’ என்று ஒரு சமயம் அவரிடம் ஒருவர் கூறினார்.

     “ஏன், தொட்டால் என்ன? குடி முழுகிப் போய் விடுமா? அல்லது, செத்துப்போய்
விடுவோமா? நான் இப்படிப்பட்ட எத்தனையோ பேர்களைத் தொட்டிருக்கிறேனே ! 
அவர்கள் கொடுத்த தின்பண்டங்களையும் வாங்கித் தின்றிருக்கிறேனே !  நான் செத்தா
போய் விட்டேன்? இன்னும் உயிருடன் தானே இருக்கிறேன் !”  என்று விவேகானந்தர்
கூறிச் சிரித்தார்.

     ‘ஜாதி வேற்றுமை கூடாது’ என்று அந்தச் சிறு வயதிலேயே அவர் நினைத்தார்.
நினைத்ததைக் கடைசிவரை பேசி வந்தார் ;  எழுதியும் வந்தார்.
 

* * *
 

     விவேகானந்தர் மாணவராக இருக்கும் போதே அற்புதமாக வீணை வாசிப்பார் ; 
அருமையாக மிருதங்கம் வாசிப்பார் ; இனிமையான குரலில் இசையோடு பாடுவார்.
அவற்றுடன் சிலம்ப விளையாட்டிலும் தீரராக விளங்கினார் !