பக்கம் எண் :

58

பெரியோர் வாழ்விலே


     இந்தச் செய்தி எப்படியோ பள்ளித் தலைவர் கோவிந்த பாபுவுக்கு எட்டியது. உடனே
அவர் தாகூரை அழைத்தார். ஒரு விஷயத்தைக் கொடுத்து, அதைப் பற்றிப் பாட்டு எழுதச்
சொன்னார். தாகூர் மிகவும் அழகான பாட்டொன்றை எழுதினார். எல்லோருக்கும் படித்துக்
காட்டினார். அதைக் கேட்டு எல்லோரும் ‘ஆ !’  என்று வாயைப் பிளந்தனர்.

     இந்த விஷயம் அப்பாவின் காதிலும் விழுந்தது. அவர் மிகவும் பெருமைப்பட்டார்.
அன்று முதல் அவர் தாகூரின் பாடல்களை அடிக்கடி கேட்டு மகிழ்வார் ;  தாகூரை
மிகவும் பாராட்டுவார். அப்பா மட்டுமென்ன ;  தாகூரின் குடும்பத்தார் எல்லோருமே
அவரைப் பாராட்டுவார்கள். ஆனால், ஒரே ஒருத்தி மட்டும், “ப்பூ !  இது என்ன
பாட்டா !  உனக்கு அவரைப் போல் எழுதத் தெரியவில்லையே !  இவரைப்போல் எழுதத்
தெரியவில்லையே !”  என்று குத்தலாகக் கூறுவாள். அவள் யார் தெரியுமா? தாகூரின்
அண்ணிதான் ! 

     அண்ணி கூறுவதைக் கேட்டுத் தாகூர் கவலைப்படமாட்டார். அண்ணி எப்போதுமே
அப்படித்தான். தாகூருடன் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பது அவளுக்கு
வழக்கம்.
 

* * *
 

     தாகூரின் அண்ணிக்குக் கிளி, மைனா, அணில் முதலியவற்றை வளர்ப்பதில்
அளவில்லாத விருப்பம் உண்டு. வீட்டில் அவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வளர்த்து
வருவாள்.