தாகூர் காலையில் பள்ளிக்குச் செல்வார். மாலை நாலரை மணிக்கு வீடு திரும்புவார். வீட்டுக்குள் நுழையும் போதே உடற்பயிற்சி ஆசிரியர் எதிரே நிற்பார். அவர் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளைத் தாகூர் செய்து முடிப்பார். அதற்குள், சித்திரம் சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர் வந்துவிடுவார். அவர் போனதும், ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுக்க ஓர் ஆசிரியர் வருவார். ஆங்கிலப் பாடம் ஆரம்பமாகி விடும். ஆனால் அப்போது தாகூருக்குப் படிப்பில் கவனம் செல்லாது. தூக்கம் கண்ணைச் சுற்றும். வாய் கொட்டாவி விடும்.
தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும் போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், கண்களில் சிறிது மூக்குப் பொடியைப் போட்டுக் கொள்வான். ஆனால் தாகூர் அப்படியெல்லாம் செய்யமாட்டார். பேசாமல் அங்கேயே படுத்துத் தூங்கிவிடுவார்.
ஓயாது, ஒழியாது பாடம் சொல்லி கொடுத்து வந்ததால், தாகூருக்குப் படிப்பில் மனம் செல்லவில்லை. அதனால்தான், அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்பு என்றால் தாகூருக்குப் பாகற்காயாகத் தோன்றியது. * * * தாகூரின் அண்ணாவுக்குக் குதிரைச் சவாரி செய்வதில் அளவில்லாத பிரியம். அவருடைய மனைவிக்கும் குதிரைச் சவாரி செய்யத் தெரியும். |