பக்கம் எண் :

பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர்

61


     அண்ணி குதிரைமேல் ஏறிச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம், “அண்ணிகூடக்
குதிரைச்சவாரி செய்யக் கற்றுக்கொண்டுவிட்டாள். நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா?”
என்று நினைப்பார்.

     ஒரு நாள், அண்ணாவிடம் தம்முடைய ஆசையை வெளியிட்டார். உடனே அண்ணா
தாகூருக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்துவிட்டார். அது மிகவும் பொல்லாத குதிரை.
அது தாகூரைச் சுமந்து கொண்டு போகும் போது, வேண்டாத குறும்புகளெல்லாம் செய்யும்.
எத்தனையோ தடவைகள் தாகூரைக் கீழே தள்ளப் பார்த்திருக்கிறது. ஆனாலும் தாகூர்
இப்படியும் அப்படியுமாக நழுவுவாரே தவிரக் கீழே விழுந்துவிடமாட்டார் !  குதிரையின்
கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவார் !  ஆனால், அந்தக் குதிரையின்
முரட்டுத்தனம் அதிக நாள் நீடிக்க வில்லை. எப்படியோ தாகூர் அதை வசப்படுத்தி
விட்டார்.

     ஒரு நாள், தாகூர் ஒரு பெரிய குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றி வந்தார். அப்போது
அந்தக் குதிரை ‘இந்தச் சிறு பையன் என்னை அடக்குவதாவது !’  என்று எண்ணியதோ,
என்னவோ ;  திடீரென்று வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஒரே தாவில் வீட்டுக்குள்
ஓடி, அங்குள்ள முற்றத்தில் போய் நின்றது. நல்லவேளை !  வீட்டின் முகடு தாகூரின்
தலையைப் பதம் பார்க்காமல் விட்டுவிட்டது !  அன்று முதல் தாகூர் அந்தக் குதிரையின்
அருகே கூடப் போவது கிடையாது ! 

* * *