சப்தத்தைக் கேட்டதும், அந்தப் பையன் மனத்தில் அச்சம் ஏற்பட்டது ; சுற்று முற்றும் பார்த்தான். மக்கள் நடமாட்டமே இல்லை. பயம் அதிகமாகிவிட்டது. அதே சமயத்தில் எதிரே புலி வருவது போலவும், அது தன் வாயைப் பிளந்து அப்படியே அவனைக் கடித்து விழுங்கி விடுவது போலவும் அவனுக்குத் தோன்றியது.
அவ்வளவுதான் ; “ஐயோ ! புலி ! புலி !” என்று கதறிக்கொண்டே வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான் ! மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, வீட்டை அடைந்தான் ; அம்மாவிடம் நடந்ததைக் கூறி அழுதான். அம்மா அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினாள்.
‘ஒரு காரியத்தை நினைப்பது எளிது ; ஆனால், அதைச் செய்து முடிப்பது எளிதன்று’ என்பதை அப்போது தான் அந்தச் சிறுவன் உணர்ந்தான். * * *
புலியைத் தேடிப் புறப்பட்டுக் கிலி பிடித்து ஓடி வந்தானே, அதே சிறுவன் குதிரை ஓட்டுவதில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். ஐந்தாவது வயதிலிருந்தே அந்தப் பழக்கம் அவனுக்கு இருந்தது. அவனுடைய அப்பா, அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத்திருந்தார். தினந்தோறும் அச்சிறுவன் அந்தக் குதிரைமீது ஏறி ஊரைச் சுற்றி வருவான். |