பக்கம் எண் :

10காளித்தம்பியின் கதை

     நாகன் சொன்னதைக் கேட்டுப் பழனி நடுங்கினான். “நாகா,
பெரியவர்களை இப்படியெல்லாம் பழிக்காதே. என்னை உனக்குப்
பிடிக்கவில்லை யென்றால் அதை என் மீது காட்டு. பெரியவர்களின்
வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளாதே” என்று சொன்னான் பழனி.


     நாகன் மீண்டும் உரக்கச் சிரித்தான். “யார் பெரியவர்? இந்தத்
தாடிக்காரச் சாமியாரா? இவர் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டால் என்ன
செய்வார்? மரமாய்ப் போ......மண்ணாய்ப் போ என்று சாபம் கொடுப்பாரா?
ஏய் பிச்சைச் சோத்துச் சாமி இவன், ஞானசம்பந்தனைப் போல அறிவும்
புகழும் பெறுவான் என்று சொன்னாயே. இவனும் ஞானசம்பந்தனைப்போலப்
பதினாறு வயதில் இறந்து விடுவானா? இப்போது இவனுக்குப் பதினாலு வயது.
அப்படி யென்றால் இன்னும் இரண்டு வருஷத்தில் இவன் க்ளோஸ்
அப்படித்தானே!” என்ற நாகன் மீண்டும் சிரித்தான்.


     அதுவரை அமைதியாக இருந்த துறவியின் முகம் சிவந்தது. அவர்
“சிறுபயலே, என்ன சொன்னாய்?” என்று கூறிக்கொண்டே தம் கையில்
பிடித்திருந்த தடியை ஓங்கியவாறு நாகன்மீது பாய்ந்தார்.


     நாகன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “ஐயோ அம்மா” என்று
அலறிக்கொண்டே படியில் சாய்ந்தான்.

 

     பழனியும் பிறரும் திடுக்கிட்டனர்.