துறவியின் சொற்களைக் கேட்ட பழனி நாணமடைந்தான். மீண்டும் துறவியைப் பணிவோடு வணங்கினான். “பெரியவரே, உங்களைப் போன்ற துறவிகளின் வாழ்த்து எல்லா நன்மைகளையும் தரும். உங்கள் வாழ்த்தைப் பெறுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று சொன்னான். துறவியின் முகம் மலர்ந்தது. மடியிலிருந்து ஒரு சிறு பையை எடுத்தார். அதைப் பிரித்தார். உள்ளே இருந்து திருநீற்றை எடுத்தார். “தம்பீ, திருஞானசம்பந்தனைப் போல அறிவும் புகழும் பெறுவாயாக” என்று கூறிக்கொண்டே அவன் நெற்றியில் திருநீறு பூசினார். பழனியின் உடல் புல்லரித்தது. அதே நேரத்தில் ‘ஹஹ்ஹா’ என்ற கேலிச்சிரிப்புக் கேட்டது. நாகன்தான் அப்படிச் சிரித்தான். துறவி திரும்பிப் பார்த்தார். நாகன் உட்கார்ந்த நிலையிலேயே பேசினான் : “ஓய் சாமியாரே, உனக்குக்கூட இவன் செல்வச் சீமான் சுந்தரேசர் மகன் என்பது தெரியும் போலிருக்கிறதே! அதுதான் இவனை வானளாவப் புகழ்கிறாய்; புகழ்ந்த வேலைக்கு என்ன எதிர்பார்க்கிறாய்? பணம் ஐந்தோ பத்தோ வேண்டுமா? கேள் பழனி பணம் தாராளமாகக் கொடுப்பான்.” |