பக்கம் எண் :

8காளித்தம்பியின் கதை

     நாகனுடன் பேசிக்கொண்டிருந்த பழனி எதேச்சையாகப் பொற்றாமரைக்
குளத்தைப் பார்த்தான். குளத்தின் கீழ்ப்படியில் நீரில் கால் நனையுமாறு
நின்றுகொண்டிருந்த ஒரு துறவி அவனையே கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தான். அவர் காவி உடை
அணிந்திருந்தார். ஒரு கையில் தடி, தடி பிடித்த கையின் தோள்புறத்தில் ஒரு
பை. நெற்றியில் பளிச்சென்று தெரியும் திருநீறு. கழுத்தில் உருத்திராட்சமாலை.
இந்தக் கோலத்துடன் இருந்த துறவி பழனியையே கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தார்.


     ‘அவர் யார்? ஏன் என்னை இப்படிப் பாக்கிறார்?’ என்று
எண்ணிக்கொண்டிருந்த பழனி நாகன் சொன்னதைக் கவனிக்கவில்லை.
பழனியின் முகத்தைக் கவனித்து, பிறகு அவன் பார்க்கும் திசையைப் பார்த்த
நாகனும் கீழ்ப்படியில் நின்ற துறவியைப் பார்த்தான். இதற்குள் துறவி, நின்ற
இடத்திலிருந்து நகர்ந்தார். ஒவ்வொரு படியாக ஏறினார். அவர் பழனி
உட்கார்ந்திருந்த படிக்கு அடுத்த படியில் பழனிக்கு எதிரே வந்து நின்றார்.
‘தம்பீ’ என்று அழைத்தார். அவர் குரலில் அன்பு ததும்பியது. பழனியும்
நாகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். துறவி யாரை அழைக்கிறார்
என்பது புரியவில்லை.


     துறவி பழனியைச் சுட்டிக்காட்டி “உன்னைத்தான் தம்பி” என்றார். பழனி
சட்டென்று எழுந்தான். அவரைக் கைகூப்பித் தலை தாழ்த்தி வணங்கினான்.
வணங்கிய தலை நிமிர்ந்தது. துறவி பழனியின் முகத்தைப் பார்த்தார். இன்னும்
சற்று நெருங்கிவந்து பார்த்தார். முகத்தோடு முகம் வைத்துப் பார்த்தார்.
துறவியின் அருள் ஒழுகும் கண்கள் பழனியின் முகத்தில் எதையோ கண்டு
ஆச்சரியத்தால் அகல விரிந்தன.


     துறவி பேசினார் :


     “தம்பீ, உன் முகத்தில் அறிவொளி வீசுகிறது. இதோ இந்த இரு கண்கள்
கருணைக்கே இருப்பிடமான கண்கள். நீ மாறாத அறிவும் குறையாத
செல்வமும் பெற்று இறவாத புகழோடு விளங்குவாய்.”