பழனி உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு “நாகா எப்போதும் நடக்கிற சில செயல்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. உதாரணமாக காலையில் சூரியன் உதிப்பான் என்கிறோம். மழைக்காலத்தில் சூரியனை நாம் பார்ப்பதில்லை. இயற்கை நிகழ்ச்சியே இப்படி இருக்கும் போது, நான் முதல்மார்க்கு வாங்குவது மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்?” என்று சொன்னான். பழனி அவ்வாறு சொன்னதற்கும், ஒரு காரணம் உண்டு. பழனி தன் தந்தையின் செல்வாக்கால், மார்க்கு வாங்குகிறான் என்று நாகன் குறைகூறுவதற்குக் காரணம், அவனுக்கு முதல் மார்க்குக் கிடைக்காததுதான். இது பழனிக்குத் தெரியும். ஒருமுறை நாகன் முதல் மார்க்கு வாங்கினால் இந்த எண்ணம் நீங்கலாம் என்று பழனி நினைத்தான். அதனால் அந்தத் தேர்வில் அவன் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒன்று செய்தான். ஒவ்வொரு பரீட்சையின் போதும், ஒரு கேள்விக்கு வேண்டுமென்றே பதில் எழுதாமல் விட்டுவிட்டான். இதனால் அவன் வாங்கும் மார்க்குக் குறையும். வழக்கமாக இரண்டாவதாக வரும் நாகமாணிக்கம் முதல் மார்க்கு வாங்கலாம். இதை மனத்தில் வைத்துத்தான் பழனி நாகனிடம் பேசினான்! நாகன் பழனியின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான். “பழனி, ஈட்டி எட்டியவரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்துக்கு முன்னே உண்மை ஊமையாகிவிடும். இந்தப் பழமொழிகளைக் கேட்டதில்லையா? பணம் இயற்கையையே மாற்றிவிடும். அப்படியிருக்கப் பணக்காரனின் மகனான நீ முதல் மார்க்கு வாங்குவதை யார் தடுத்துவிட முடியும்? உன் தந்தையைக் காட்டிலும் பெரிய பணக்காரர் நினைத்தால் ஒருவேளை முடியலாம்” என்று கூறிய நாகன் பழனியின் முகத்தைப் பார்த்தான். தன் பேச்சால் அவன் மனம் புண்பட்டு இருப்பதைப் பார்த்து மகிழவே அவன் பழனியின் முகத்தைப் பார்த்தான். பழனி நாகன் சொன்னதைக் கேட்டதாகவே தெரியவில்லை. அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். |