அதனால்தான் அழகன் நாகனைக் காட்டியதும் பழனி வெறுப்பில்லாமல் அவனைப் பார்த்தான். மேலும் “அழகா வா, நாகனைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்றான். அழகன் தயங்கினான். அவன் அதை விரும்பவில்லை. “பழனி, நீ நாகனைக் காணும் போதெல்லாம் அவனிடம் பேசுகிறாய். அவனோ அந்த நேரத்தில் உன்னை உன் எதிரிலேயே இழிவாகப் பேசி மகிழ்கிறான். அது மட்டுமா? ‘பார், பழனியிடமே இதைக் கூறினேன். பதில் பேசினானா? பேசத் தைரியம் ஏது’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறான். இது எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்று அவனை மதித்து அவனிடம் பேசாதே. அல்லது அவனிடம் பேசும்பொழுது அவன் வாலை ஒட்ட நறுக்கு’ இப்படிப் படபடவென்று பேசினான் அழகன். பழனியின் முகத்தில் புன்னகை தோன்றியது. “அழகா, நாய் மனிதனைக் கடித்தால் மனிதன் திரும்பவும் நாயையா கடிக்கிறான்? என்மீது உள்ள கோபத்தை நாகன் இப்படிச் சொற்களைக் கொட்டித் தீர்த்துக்கொள்கிறான். அதுதான் சரி என்று அவன் நினைத்தால் செய்யட்டும். என்றாவது ஒருநாள் தன் தவற்றை உணர்வான். வா நாம் போவோம்” என்று சொல்லி முன்னே நடந்தான் பழனி. அழகன் பழனியைத் தொடர்ந்து சென்றான். பழனி, நாகன் உட்கார்ந்திருந்த படிக்கட்டுக்குச் சென்றான். பழனி நாகனைப் பார்த்தான்; சிரித்துக்கொண்டே அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அழகனும் பழனிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். “நாகா, தேர்வு நன்றாக எழுதியிருக்கிறயா?” என்று உண்மையான அக்கறையுடன் கேட்டான் பழனி. “எழுதுவதற்கு என்ன குறைச்சல்! எப்போதும் எழுதுவதைப்போல நன்றாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால், எப்போதும்போல முதல் மார்க்கை நீ வாங்கப் போகிறாய். என்ன பழனி, நான் சொல்வது உண்மைதானே?” என்று கேட்டு ஏளனமாகச் சிரித்தான் நாகமாணிக்கம். |