பழனிக்கு முதல் பரிசு கொடுத்தாங்க. இல்லேனா எனக்குத் தானே முதல் பரிசு கிடைத்திருக்கும்” என்று தன்னைப் பாராட்ட வந்தவர்களிடமெல்லாம் கூறினான். அதுமட்டுமா? “நானும் எவ்வளவோ சிரமப்பட்டுத்தான் படிக்கிறேன். ஆனால், ஒரு தரமாவது முதல் மார்க்கு கிடைக்கிறதா? உம், பள்ளி நிர்வாகியின் மகனுக்கு முதல் மார்க்குன்னு ஏதாவது சட்டம் இருக்கும் போலிருக்கிறது” என்று ஏளனமாகப் பேசிவந்தான். பழனி இவற்றைக் கேள்விப்பட்டான். பாவம், அவன் என்ன செய்வான்? பணக்காரரின் மகனாகப் பிறந்தது அவன் தவறா? பழனி உண்மையாக உழைத்து முதல் மார்க் பெற்றாலும், முதல் பரிசு வாங்கினாலும் நாகன் திரித்துப் பேசுகிறான். அது அதிசயமல்ல; அதைச் சில மாணவர்களும் ஊரிலிருந்த சிலரும் நம்பினார்கள். அதுதான் அதிசயம். மற்ற இடங்களில் நடப்பதை அறிந்திருந்த பலரும் நாகன் சொல்வது உண்மை என்றே நம்பினார்கள். தலைமை ஆசிரியர் நாகனை அழைத்துக் கண்டித்தார். நாகன் அதற்கெல்லாம் அசையவில்லை. “உண்மையைச் சொன்னால் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு மிரட்டுகிறார். உம், இது பழனியின் பள்ளிக்கூடம். அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை இந்தப் பள்ளியிலிருந்தே விரட்டினாலும் விரட்டுவான்” என்று தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்தான் நாகன். பழனி இவற்றை அறிவான். தான் திறமையால் பெற்றவற்றை அப்பாவின் செல்வாக்கால் பெற்றவை என்று சொல்கிறார்களே என்று வருந்துவான். அவ்வளவுதான். தன்னைப்பற்றி ஏதாவது கதை கட்டிக்கொண்டிருக்கும் நாகமாணிக்கத்தைத் தன் பகைவனாக என்றும் நினைக்கவில்லை. அவனும் தன் நண்பன் என்றே நினைத்தான். நண்பனிடம் பழகுவதைப் போலவே பழகினான். |