சைக்கிள் மற்றொரு லாரிக்காரர் வாங்கித் தந்தது. அவன் உட்கார்ந்து படிக்கும் நாற்காலி மேஜையும்கூட இப்படிக் கிடைத்தவையே. நாகன் இதைப் போன்ற செயல்களில் மட்டும் திறமையானவன் என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடக்கூடாது. அவன் படிப்பதிலும் கெட்டிக்காரன். ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் தவறு இல்லாமல் பதில் சொல்வான். நடக்கும் தேர்வு ஒவ்வொன்றிலும் நல்ல மார்க்கு வாங்குவான். என்றாலும் அவனுக்குத் திருப்தியில்லை. காரணம் பழனிதான். பழனி ஒவ்வொரு முறையும் நாகமாணிக்கத்தைக் காட்டிலும் பத்து அல்லது பதினைந்து மார்க்குகள் அதிகம் வாங்கி விடுவான். இதுதான் நாகமாணிக்கத்துக்குப் பிடிப்பதில்லை. நாகன் பணக்காரனாக நடிப்பவன். பழனியோ தன்னைப் பணக்காரனாகவே காட்டிக் கொள்ளாதவன் அதனால் பழனி மாணவர்களிடம் மதிப்புப் பெற்றான். படிப்பாலும் பண்பாலும் ஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்தான். நாகமாணிக்கம், தனக்கு வரவேண்டிய புகழைப் பழனி பறித்துக்கொள்வதாக நினைத்தான். பழனி மட்டும் அந்தப் பள்ளியில் இல்லை என்றால், முதல்மார்க்கு வாங்குபவன் யார்? நாகமாணிக்கம்தான். சமீபத்தில் நடந்த பேச்சுப் பேட்டியில்கூட நாகனுக்கு இரண்டாம் பரிசுதான். முதல் பரிசைப் பழனி தட்டிக்கொண்டான். பழனியில்லை என்றால் அது நாகனுக்குத்தானே கிடைத்திருக்கும்! இந்தக் காரணங்களால், தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பழனியைத் தன் பகைவனாகக் கருதினான் நாகமாணிக்கம். பழனியிடம் நேரேசென்று சண்டையிட்டு அவனை அடித்து விட முடியாது. பழனி பெரிய இடத்துப் பிள்ளை, அதனால் பழனியைத் தூற்றுவதைத் தன் தொழிலாகக் கொண்டான் நாகன். “பழனி யாரு? பணக்கார ‘பாசு’ வோட மகனாச்சே? இது பேச்சுப் போட்டியின் நீதிபதிகளுக்குத் தெரியாதா? அதனாலே |