எத்தனை ஏக்கத்தோடு பார்த்து நிற்கிறார்கள் தெரியுமா? அவர்களையெல்லாம் பார்க்கும்போது நான் படுவது ஒரு கஷ்டமா?” என்று கேட்டான் பழனி. பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள், நாம் அவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டசாலிகள் என்று திருப்தியடையும் உன் உயர்ந்த குணத்தைப் பாராட்டுகிறேன். பழனி உன்னுடன் பேசப் பேச என் அறிவு வளர்வதைப் போல் இருக்கிறது” என்றான். அதற்குள் மணி அடித்தது. பழனியும் குருசாமியும் வகுப்பிற்குச் சென்றனர். மறுநாள், பழனி முன்நாளைப் போல மணி அடிக்கும் வரை மரத்தடியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். குருசாமி வேறு சில நண்பர்களுடன் வந்தான். குருசாமியுடன் வந்தவர்களில் சிலரை இதற்கு முன் பள்ளியில் பார்த்த நினைவு வந்தது. பழனி அவர்களையும் குருசாமியையும் மாறி மாறிப் பார்த்தான். “பழனி, இவன் சங்கரன். பத்தாம் வகுப்பு. இவன் செந்தில். எட்டாம் வகுப்பு. இவன் முருகன். ஏழாம் வகுப்பு...” என்று அவனுடன் வந்திருந்த மாணவ நண்பர்களை அறிமுகப்படுத்தினான். பழனி அனைவருக்கும் கை கூப்பினான். இத்தனை பேரும் தன்னை ஏன் தேடி வந்தனர் என்பது தெரியவில்லை. குருசாமி பேசினான்: “பழனி, நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். எனக்கு மட்டுமல்ல. இதோ இங்கிருக்கும் அனைவருக்கும் செய்ய வேண்டும். இவர்களும் உன்னிடம் அதே உதவியைக் கேட்கத்தான் வந்திருக்கிறார்கள்.” பழனி அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. “நான் என்ன உதவி செய்யவேண்டும். சொல் குருசாமி. முடிந்தால் நிச்சயம் செய்கிறேன்” என்றான். |