“சொல்கிறேன். ஆனால் முதலில் உதவி செய்வதாக வாக்களி. அது உன்னால் செய்ய முடிந்த உதவி என்பதை மட்டும் இப்போதே சொல்கிறேன். வாக்களித்ததும் உதவியைக் கூறுகிறேன்.” “அப்படி என்ன உதவியை நான் செய்யமுடியும்? என்னால் முடிந்த உதவியாக இருந்தால் நிச்சயம் செய்கிறேன்” என்றான் பழனி. உடனே குருசாமி தன் சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்துப் பழனியிடம் நீட்டினான். “பழனி, நீ இதில் கையெழுத்திட வேண்டும், அவ்வளவுதான். இந்தச் சிறிய உதவி செய்தால் போதும்” என்றான். பழனி அதை வாங்கிப் படித்தான். அவன் ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை. அதில் என்ன இருந்தது தெரியுமா? திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவன் ஒருவனை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பள்ளியில் தினமும் காலையில் இறை வழிபாடு நடக்கும். அங்கே மாணவர்களை அணிவகுக்கச் செய்வதும், வழிபாட்டை நடத்துவதும், பின்னர் மாணவர்கள் கலைந்து வகுப்பிற்குச்செல்ல உத்தரவு அளிப்பதும் மாணவர் தலைவன் கடமைகள். மாணவர் சார்பாகத் தலைமை ஆசிரியரிடமும் வாதிடும் சலுகையும் அவனுக்கு உண்டு. வகுப்புத் தலைவர்கள் அனைவரும் அவனுக்குட்பட்டவர்கள். அவர்கள் துணையுடன் வகுப்பு நடக்காதபோது மாணவர்களிடையே ஒழுங்கும் அமைதியும் நிலவ அவன் உதவி செய்வான். மாணவர் தலைவன் சொல்லுக்கு அடங்காத மாணவனுக்குத் தலைமை ஆசிரியர் தண்டனை தருவார். அதனால் மாணவர் தலைவன் பதவி மிகச் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த ஆண்டு மாணவர் தலைவனைத் தேர்ந்தெடுக்க மறுவாரம் தேர்தல் நடக்கவிருந்தது. அந்தத் தேர்தலில் மாணவர் தலைவனாகப் போட்டியிட பழனியின் பெயரை முன்மொழிந்த கடிதம்தான் குருசாமி |