கொடுத்தது. பழனியின் பெயரை பத்தாம் வகுப்பு மாணவன் சங்கரன் முன்மொழிந்திருந்தான். அதை குருசாமியும், ஏழாம் வகுப்பு மாணவன் முருகனும் வழிமொழிந்தனர். அதற்குக்கீழே, ‘மாணவர் தலைவன் பதவிக்குப் போட்டியிட நான் சம்மதிக்கிறேன்’ என்று எழுதியிருந்தது. அதன் கீழ்தான் பழனியைக் கையெழுத்திடுமாறு குருசாமி கேட்டுக் கொண்டான். “மாணவர் தலைவன் பதவிக்குப் போட்டியிடுவதா? படித்து முதல் மார்க்குப் பெறுவதுதானே நம் இலட்சியம். போட்டியிடுவதிலும், பிறகு, தலைவனுக்குரிய கடமைகளைச் செய்வதிலும் நேரம் போனால் எப்படி முதல் மார்க்கு வாங்கும் அளவு படிப்பது” என்று எண்ணினான் பழனி. அதனால், “குருசாமி, நீயும் உன் நண்பர்களும் என்னிடம் இத்தனை அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். நானோ பள்ளிக்குப் புதியவன் எனக்கு இந்தப் போட்டியும் பொறுப்பும் வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான் பழனி. குருசாமி விடுவானா? வற்புறுத்தினான். வற்புறுத்துவதற்காகவே அவன் அழைத்துவந்த மற்றவர்களும் அவனை வற்புறுத்தினர். “பழனி இதில கையெழுத்துப் போடுகிற ஒரு வேலையை மட்டும் நீ செய். மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெற்றால், மாணவர் தலைவனின் கடமையை மிகச் சிறப்பாகச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால் இதில் கையெழுத்திடு. எங்களுடைய திருப்திக்காக மாணவர்களின் நன்மைக்காக இதில் கையெழுத்திடு. உன்னால் மாணவர் தலைவன் பதவியே பெருமை பெறும்” என்றான் குருசாமி. மற்றவர்களும் அதற்கு மேல் பேசினார்கள். தன்னை நன்கு அறியா மற்றவர்களிடம் குருசாமி எவ்வளவு அதிகமாகத் தன்னைப் புகழ்ந்து பேசியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அடிமேல் அடி அடித்தால் |